நடனமாடி கொண்டு இருந்த பள்ளி மாணவி சுருண்டு விழுந்து சாவு..!


கோலார் தாலுகா பெட்டமங்களாஒப்ளி டி.கோசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் பூஜிதா(வயது 14). இவள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவையொட்டி மாணவ-மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பூஜிதாவும் நடன போட்டியில் பங்கேற்பதற்காக தனது பெயரை கொடுத்து இருந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பூஜிதாவும், அவரது தோழிகளும் பள்ளியில் நடன பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது நடனமாடி கொண்டு இருந்த பூஜிதா திடீரென சுருண்டு விழுந்தாள்.

இதுபற்றி அறிந்த பள்ளி ஆசிரியர்கள் பூஜிதாவை மீட்டு கோலார் டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பூஜிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ந்த ஆசிரியர்கள் உடனடியாக பூஜிதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோர், பூஜிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த காட்சி ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களை கண்கலங்க செய்தது. இதையடுத்து பூஜிதாவின் உடலை பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் நடன பயிற்சியில் ஈடுபட்ட போது பூஜிதா மயக்கம் போட்டு விழுந்ததும், அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் இதனை கண்டு கொள்ளாமல் இருந்ததும் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் அந்த ஆசிரியர் உடனடியாக விரைந்து செயல்பட்டு இருந்தால் பூஜிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவரது அலட்சியத்தால் தான் பூஜிதா இறந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

நடன பயிற்சியில் ஈடுபட்ட போது மாணவி சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கோலாரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!