மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் இத்தனை கோடி வருமானமா..?


மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

2019- 2020-ம் ஆண்டு மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. பிரசித்திபெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ந் தேதியும் நடந்தது.

20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த 21-ந் தேதி காலை பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது.


இந்த ஆண்டுக்கான (2019- 2020) மண்டல மகர விளக்கு சீசனையொட்டி நேற்றைய நிலவரப்படி சபரிமலை வருமானம் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளது. இதில் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மற்றும் வழிபாடு கட்டணங்கள் அடங்கும்.

கடந்த ஆண்டு 2018-2019 சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.179.23 கோடியாகும். கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததும், இயற்கை சீற்றம் காரணமாக ஓட்டல்கள் உள்பட வணிக நிறுவனங்கள் ஏலம் போகாததால் வருமான இழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்த ஆண்டு அத்தகைய சூழ்நிலை இல்லை என்பதால், பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. ஆனால் 2017-2018 சீசனில் கோவில் வருமானம் ரூ.277.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது காணிக்கையாக வந்த நாணயங்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக 300 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாணயங்கள் எண்ணும் பணி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நடை வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.100 கோடி தாண்டலாம். அதே நேரத்தில் 2017-2018 சீசனை விடவும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!