மெரினாவில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்


மெரினா கடற்கரையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 2018-ம் ஆண்டு மே 7-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ‘‌ஷிப்டு’ முறையில் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணியில், 8 பகுதி வேலைகள் முடிந்துள்ளன. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்தம் ஆகிய பணிகளும் முடிவடைந்துள்ளது.

நினைவிடம் அருகில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு அதில் நவீன வடிவமைப்பு பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.


‘பீனிக்ஸ்’ பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் நீளம் இருக்கும். சென்னை ஐ.ஐ.டி. இதற்கான வடிவமைப்பை வழங்கி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருகிறது.

துபாயில் இருந்து கட்டுமான சாதனங்கள் எடுத்துவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நினைவிடம் முழுவதும் தரையில் கிரானைட் கற்களை பதிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்துவருகிறது. இது ஓரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளது.

பொதுமக்களை கவரும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கட்டிடக்கலை நிபுணர்களும் அவ்வப்போது கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கட்டுமான பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி நினைவிடத்தை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கேற்ப பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி 3-வது வாரத்தில் நினைவிடத்தை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். சமாதியை புதுப்பிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அந்த பணிகளும் வேகமாக நடந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!