சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா கைது


போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மெகபூப் பாஷா என்பவனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மெகபூப் பாஷா என்பவனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் குற்றவாளிகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. போலீசார் அவர்களைத் தேடி வந்த நிலையில், கர்நாடக போலீசார் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வில்சன் கொலை செய்யப்பட்ட போது முதலில் கொலை வழக்கு, ஆயுதச் சட்டம் (துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தது), கொலைமிரட்டல்ஆகிய பிரிவுகளின்கீழ் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்போது ‘உபா‘ சட்டமும் பாய்ந்துள்ளது.

கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பவன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!