பிரபல நடிகை வீடு மீது குண்டு வீசலாமே.. ஜோக்கடித்த இந்திய பேராசிரியருக்கு நடந்த அதிர்ச்சி..!


அமெரிக்கா மீது ஈரான் குண்டு வீசித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று விளையாட்டாக சொல்லப் போய் இப்போது வேலையை இழந்துள்ளார் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பேராசிரியர்.

பாஸ்டனில் உள்ள கல்லூரியில் பணியாற்றி வந்தவர் அஷீன் பான்சே. இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார். ஈரான் குறித்து சமீபத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஈரானின் நிலைகளை குறி வைத்து அமெரிக்கா தாக்கும் என்று சொல்லியிருந்தார்.

இதையடுத்து தனது முக நூலில் டிரம்ப் பேச்சு குறித்து கருத்தை பதிவு செய்திருந்த அஷீன், அப்படியானால் பேசாமல் ஈரானும் அமெரிக்காவில் 52 நகரங்களைத் தேர்வு செய்து அங்கு குண்டு போடலாம். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்காவில் குண்டு போடலாம். கிம் கர்தஷியான் குடும்பத்தினர் வசிக்கும் இருப்பிடத்தில் குண்டு வீசலாம் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஸ்டன் கல்லூரி, அஷீனை வேலையை விட்டு நீக்கி விட்டது. அஷீனின் கருத்தானது, கல்லூரியின் நெறிமுறைகளுக்கும், அமெரிக்க கலாச்சாரத்திற்கும் புறம்பானது என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தக் கருத்துக்காக தற்போது அஷீன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் தான் அதை மிரட்டல் தொனியில் சொல்லவில்லை. மாறாக ஒரு நகைச்சுவைக்காகவே அப்படி சொன்னதாக கூறியுள்ளார் அஷீன். கல்லூரியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது, பேச்சு சுதந்திரத்திற்கு விரோதமானது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ஆனால் அஷீனின் பேச்சு ஒரு மிரட்டல் தொணியிலானது. இது வன்முறையைத் தூண்டும் வகையிலான, துவேஷத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை அனுமதிக்க முடியாது என்று விளக்கியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!