ஈரானில் வெடித்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது..!


ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமையன்று பயணிகள் விமானம் ஒன்று உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்டு சென்றது.

ஆனால் சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் பயணம் செய்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் ஈரான் குடிமக்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இதில் சந்தேகம் எழுந்தது.

இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாக வில்லை, அந்த விமானத்தை தாங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ராணுவம் ஒப்புக்கொண்டது.

இது குறித்து அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, ‘‘உக்ரைன் விமானத்துக்கு நேர்ந்த துயரம் குறித்து, ராணுவ விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், மனித தவறு காரணமாக உக்ரைன் விமானம் ஏவுகணைகள் வீச்சில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது. இது மன்னிக்க முடியாத தவறு’’ என்று கூறினார்.

இந்த ஒப்புதலை முக்கியமான நடவடிக்கை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த துயர சம்பவத்தில் பலியான இங்கிலாந்து நாட்டின் 4 பேர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, கனடா, உக்ரைன் மற்றும் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து, உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் விரிவான, வெளிப்படையான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அதிபர் ஹசன் ரூஹானி அரசுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர். ஷெரீப் மற்றும் அமீர் கபீர் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே போராட்டங்கள் நடத்தினர்.

அமீர் கபீர் பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த போராட்டத்தில் ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ராப் மக்காரே கலந்து கொண்டதாகவும், இதில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் போராட்டக்காரர்களை அரசுக்கு எதிராக தூண்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் அவரோ, தான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை, உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் சென்றேன் என கூறினார்.

ஆனால் ராப் மக்காரே, உரிய காரணங்கள் இன்றி கைது செய்யப்பட்டது, சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறிய செயல் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்தார்.

இருப்பினும் கைது செய்த ஒரு மணி நேரத்தில் ராப் மக்காரே விடுவிக்கப்பட்டு விட்டார்.

இங்கிலாந்து தூதர் ராப் மக்காரேயை கைது செய்த நடவடிக்கைக்காக, ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஒர்டாகஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த நடவடிக்கை வியன்னா உடன்படிக்கையை மீறிய செயல். இங்கிலாந்து தூதரின் உரிமைகளை மீறியதற்காக அந்த நாட்டிடம் ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லா தூதர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!