22 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பெண் டாக்டர் அஸ்வினி..!


கும்மிடிப்பூண்டி ஒன்றியத் தில் 22 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக பெண் டாக்டர் பொறுப்பேற்று கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக போட்டியிட்டவர் 22 வயதான பெண் டாக்டர் அஸ்வினி சுகுமாரன்.

இவர் நேற்று புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளரை விட 2,547 வாக்குகள் அதிகமாக பெற்று திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் என்ற சாதனையை படைத்து உள்ளார். தனது ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில், சிறப்பான ஊராட்சி பணிகளோடு, மருத்துவ சேவைகளையும் செய்திட உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவது மட்டுமின்றி இ-சேவை மையத்தையும் அமைக்க உள்ளதாக கூறுகிறார்.

மேலும் அவர், மாதம் ஒருமுறை ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திடவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!