அமெரிக்க விமானப்படைகள் முகாம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்..!


ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான பிரச்சினைகள் ஏராளம். அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

‘ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ராணுவ தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’, என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!