என்னை சாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்


சாதிய ரீதியிலான பிரிவினைகள் குறித்து கருத்து வெளியிட்டதால், சமூக வலைதளங்களில் தன்னை கேலி செய்வதாக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன், கவுதம் மேனன், வெற்றி மாறன், செழியன், ரத்னகுமார், லட்சுமி ராமகிஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் சினிமா பின்னால் உள்ள சாதிய ரீதியிலான பிரிவினைகள் குறித்து லட்சுமி ராமகிருஷ்னன் கருத்து வெளியிட்டார். இது இணையதளத்தில் பரவி சர்ச்சையானது. லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்தும் கேலி செய்தும் பலர் கருத்துக்கள் பதிவிட்டனர்.

இந்த நிலையில் தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இயக்குனர்களுடனான கலந்துரையாடலுக்கு பிறகு எனது சமூக வலைத்தளத்தள பக்கத்தில் தேவையற்ற கருத்துக்கள் வருகின்றன. கிண்டல் செய்கிறார்கள். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதற்கு யாராவது பணம் அளிக்கிறார்களா? யாருக்கு சாதி வெறி எனக்கா அல்லது இதுமாதிரி கருத்துக்கள் வெளியிடுகிறார்களே அவர்களுக்கா?

சாதிக்கும் மதத்துக்கும் பேதம் தெரியாமல்தான் என்னை வளர்த்து இருக்கிறார்கள். சாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. வெற்றிமாறன் முன்னிலையில்தான் அவருடைய படங்களில் இருக்கும் வன்முறைகள் பற்றி சொன்னேன். வன்முறை காட்சிகளால் சமுதாயம் பாதிக்காதா என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. சினிமாவில் பணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கிறது. என்னை கிண்டல் செய்வதை விட்டு சாதிக்க பாருங்கள்.”

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!