ஆசையாக திருமணத்திற்கு ஷாப்பிங் போன ரவீந்தர் சிங் சுட்டு கொலை.. பாகிஸ்தானில் பகீர்


சீக்கிய இளைஞர் ஒருவர் பாகிஸ்தானின் பெஷாவரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான ரவீந்தர் சிங் கொலையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பெஷாவர் நகரின், சாம்கனி பகுதியில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. யார் சுட்டார்கள் என்பது இதுவரை தெரியவில்லையாம்.

பிரபல பத்திரிக்கையாளரான ஹர்மீத் சிங் என்பவரின் சகோதரர்தான் இந்த ரவீந்தர் சிங். மலேசியாவில்தான் இவர் வசித்து வந்தார், ஆனால் தனது திருமணத்தையொட்டி, பெஷாவரில் சில பொருட்களை ஷாப்பிங் செய்ய பாகிஸ்தான் சென்று இருந்தார். இப்படியான ஒரு சூழ்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

குருநானக்கின் பிறப்பிடமான நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா மீது, கடந்த வெள்ளிக்கிழமை, சில கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலின் பின்னணியில் ரவீந்தர் சிங் கொலையும் பார்க்கப்படுகிறது. இதனிடையே,

“சீக்கிய சமூகத்தின் பாதுகாப்பு நலனை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

குருத்வாரா நங்கனா சாஹிப் மீதான தாக்குதலையடுத்து, இதற்காகத்தான் நாங்கள் குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவந்தோம். அந்த சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது என்று, பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இக்கொலை சம்பவம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!