2 மனைவிகளையும் ஊராட்சி தலைவர்களாக்கிய விவசாயி..!


வந்தவாசி அருகே 2 மனைவிகளையும் ஊராட்சி தலைவர்களாக்கிய விவசாயி வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தைச் சேர்ந்த வழூர்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 47). விவசாயி. இவருக்கு செல்வி (45), காஞ்சனா (32)ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் செல்வி வழூர்அகரம் ஊராட்சி மன்ற தலைவராக 2011-16-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இப்போது அவர் மீண்டும் அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

தனசேகரனின் மற்றொரு மனைவி காஞ்சனாவுக்கு, சொந்த ஊரான கோவில்குப்பம்சாத்தனூர் கிராமத்திலேயே ஓட்டு இருந்தது. வாக்காளர் பட்டியலில் காஞ்சனா அவரது பெயரை கணவரின் ஊரான வழூர்அகரம் கிராமத்திற்கு மாற்றவில்லை. இந்த நிலையில் அவர் கோவில் குப்பம்சாத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

கடந்த மாதம் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை வந்தவாசி தூய நெஞ்ச மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் செல்வி வழூர்அகரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், காஞ்சனா கோவில்குப்பம்சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் வெற்றி பெற்றனர். மனைவிகள் 2 பேரையும் ஊராட்சி மன்ற தலைவர்களாக்கியதை தொடர்ந்து தனசேகரன் 2 மனைவிகளுடன் அவர்களது கிராமங்களுக்கு சென்று வீதி வீதியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!