தெருவில் ஈராக்கியர் மகிழ்ச்சி நடனம்… அமெரிக்கா வெளியிட்ட வீடியோ..!


ஈரான் ராணுவத் தளபதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இதை ஈராக்கியர் நடனமாடி கொண்டாடினர் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது.


ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

தளபதி காசிம் சோலிமானி அமெரிக்கா கொன்ற பின்னர் ஈராக்கியர்கள் “தெருவில் நடனமாடுவதை கண்டதாக ஒரு வீடியோவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிட்டார்.

ஈராக்கியர்கள் – சுதந்திரத்திற்காக தெருவில் நடனமாடுகிறார்கள்; ஜெனரல் சோலிமணி இனி இல்லை என்பதற்கு நன்றி” என்று பாம்பியோ கூறி உள்ளார். ஒரு சாலையில் ஓடும் ஏராளமான மக்கள் ஈராக்கிய கொடிகள் மற்றும் பதாகைகளை அசைக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வீடியோவிற்கான ஆதாரத்தை வழங்கவில்லை. மேலும் எந்த விவரங்களையும் வழங்கவில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!