புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை… கடலூரில் பரபரப்பு..!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கினர்.

அப்போது அம்பேத்கார்நகரை சேர்ந்தவர்களுக்கும் மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர். அனைவரும் அங்கிருந்து ஓடினர்.

சிறிதுநேரம் கழித்து வேல்முருகன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளால் வெட்டியது. இதில் தலையில் வெட்டுக்காயம் அடைந்த வேல்முருகன் அங்குள்ள முள்புதரில் ரத்தவெள்ளத்தில் சாய்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் புதரில் வேல்முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அவரது மனைவி சவுமியா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வேல்முருகன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்டது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வேல்முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!