10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரிய நிகழ்வு… ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்..!


அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை தொடங்கியது. இந்த கிரகணத்தை சூரிய கண்ணாடி மூலம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். இந்த அற்புத காட்சிதான் சூரிய கிரகணம். இது எப்பொழுதாவதுதான் நிகழும். நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு இன்று தோன்றியது. காலை 8 மணியளவில் கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பகுதி அளவில் தோன்ற தொடங்கியது. அதன்பின்னர் கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் சூரிய கிரகணம் தோன்றியது. சென்னையில் பகுதி அளவு தெரிந்தது.

சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவியலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ளது. சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளுக்கு ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு தோன்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அடுத்த சூரிய கிரகணம் 2031 மே 21-ந்தேதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
: