80 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழும் காதல் தம்பதி பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்..!


உலகில் வாழும் வயதான தம்பதியராக கின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான்(106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன்(105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

1934-ம் ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். சார்லோட்டிடம் மலர்கொத்துடன் ஜான் தனது காதலை வெளிப்படுத்த இருவரும் 1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் தொடக்கக் காலத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். திருமண உறவுகள் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக ’காலத்துக்கேற்ப நவீனமயமாதல்’ ‘விட்டுக்கொடுத்தல்’ என்னும் தத்துவங்களை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.


திருமணத்துக்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒருவர்மீது ஒருவர் செலுத்திய அன்பின் ஒட்டுமொத்த ஆயுள் 211 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள். காலத்தின் சோதனைகளை கடந்த தெய்வீக காதல் என இலக்கியரசனையுடன் அமெரிக்க ஊடகங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

இந்த ஜோடியை பற்றிய விபரமறிந்த நட்பு வட்டாரங்கள், இவர்கள் கடந்தகால கதைகளைப்பற்றி பேசுவதுண்டு. ஆனால், கடந்த காலத்துக்குள்ளேயே மூழ்கி கிடப்பதில்லை என கூறுகின்றன.

இத்தனை பெருமைக்குரிய இந்த தம்பதியருக்கு குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. அதை ஒரு மனக்குறையாகவே கருதாமல் இருவரும் 80 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பது இவர்களின் சிறப்பம்சமாகும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!