பட்டப்பகலில் ஓடஓட விரட்டி வாலிபருக்கு மர்மகும்பல் செய்த கொடூரம்..!


நெல்லை டவுனில் பட்டப்பகலில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன் (வயது 26). இவர் இன்று காலை பழைய பேட்டையில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் வாள் மற்றும் அரிவாளால் கணேச பாண்டியனை வெட்டினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கணேச பாண்டியன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க தென்காசி மெயின் ரோட்டில் ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து அவரை ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்த அப்பகுதியினர் கத்தி கூச்சலிட்டவாறு மர்ம கும்பலை விரட்டி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை சோதனை சாவடியில் நின்ற போலீசாரும் மர்ம கும்பலை விரட்டினர். இதில் ஒரு வாலிபர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பியோடி விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணன், உதவி கமி‌ஷனர் சதீஷ்குமார், பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான கணேசபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாங்குநேரி அருகே உள்ள நம்பி நகரை சேர்ந்த நவீன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

கடந்த ஆண்டு ஏரல் அருகே வினோத் உள்ளிட்ட 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உடல்கள் கால்வாயில் வீசப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலையில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வினோத் கூட்டாளிகள் கண்ணனை பழிக்கு பழியாக வெட்டி கொன்றனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கணேச பாண்டியன் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கண்ணன் கூட்டாளிகள் அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக கணேச பாண்டியனை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

அதன்படி கண்ணனின் சகோதரர் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த துரை முத்து (19), மேலச்செவலை சேர்ந்த லட்சுமணன், நாங்குநேரி நம்பி நகரை சேர்ந்த நவீன் (19), தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் (19) ஆகிய 4 பேரும் இன்று காலை கணேச பாண்டியனை வெட்ட திட்டம் போட்டு அதன்படி கணேச பாண்டியனை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நவீனை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினருக்கிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு கொலை நடப்பதால் டவுன் கண்டியப்பேரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!