எனது தாயாரை நான் கொலை செய்யவில்லை.. தஷ்வந்த் பரபரப்பு புகார்..!


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக ‘நான் எனது தாயை கொலை செய்யவில்லை, வேண்டுமென்றே என்மீது பழி போடுகிறார்கள்’ என கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் தஷ்வந்த் கூறினார்.

குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். இவர் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்து உடலை எரித்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த 2–ந்தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்துவிட்டு தப்பினார்.

மும்பையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தஷ்வந்தை போலீசார் தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், நேற்றும் தஷ்வந்த் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் காலை 10.40 மணிக்கு தொடங்கிய ரகசிய விசாரணை மதியம் 1 மணி வரை நீடித்தது.


அப்போது சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் கார்த்திகாதேவி, தடவியல்துறை நிபுணர் மோகன், பள்ளி முதல்வர் வெங்கட்ராம் ஆகியோரிடமும் நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற (ஜனவரி) 2–ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக கோர்ட்டுக்கு வந்த தஷ்வந்த், எனது தாயாரை நான் கொலை செய்யவில்லை. வேண்டுமென்றே என்மீது பழிபோடுகிறார்கள் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது, தொண்டு நிறுவன அமைப்பை சேர்ந்த 2 பெண்கள், பத்திரிகையாளர்களிடம், நீங்கள் ஒரு கைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போகும். பத்திரிகைகள் தஷ்வந்துக்கு துணை போகக்கூடாது, அவரை நீங்கள் ஒரு ஹீரோ போல சித்தரிக்கிறீர்கள் என்று ஆவேசமாக பேசினர்.

அதற்கு பத்திரிகையாளர்கள், எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம். யாருக்கும் நாங்கள் தொந்தரவாக இல்லை என்று தெரிவித்தனர். இதனால் அந்த 2 பெண்களும் அங்கிருந்து சென்றனர்.- Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!