நள்ளிரவில் கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை… அதிர வைத்த காரணம்..!


செஞ்சி அருகே இன்று காலை விவசாயி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி ராமன்(வயது 50). விவசாயி. இவர் தனது வயல் அருகே உள்ள பகுதியில் அரசு வழங்கும் நிதிமூலம் புதிதாக வீடுகட்டி வருகிறார்.

கட்டுமான பணி நடந்து வருவதால் தினமும் அந்த பகுதியில் கட்டில் போட்டு இரவில் தூங்குவது வழக்கம். நேற்று இரவு ஜானகிராமன் அங்கு சென்று தூங்கினார். இன்று காலை அவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக வயலுக்கு சென்ற விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த ஜானகிராமனின் மனைவி விமலா அவரது மகன்கள் விக்னேஷ், பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்தனர். அங்கு ஜானகிராமன் பிணத்தை பார்த்து கதறி துடித்தனர்.

இதுகுறித்து செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ் பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் அங்கு விரைந்தனர். அவர்கள் ஜானகிராமனின் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. ஜானகிராமனின் பக்கத்து வயல்காரர் சரவணன்(28). இவர்களுக்கிடையே வரப்பு தகராறு இருந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜானகிராமன் தனது வயல்வரப்பை சீர்செய்தபோது சரவணன் தட்டிக்கேட்டார். இதனால் இருவரும் வயலிலேயே மோதிக்கொண்டனர்.

உடனே அக்கம் பக்கம் இருந்த விவசாயிகள் அவர்களை சமரசம் செய்தனர். என்றாலும் இந்த பிரச்சினை நீருபூத்த நெருப்புபோல புகைந்து கொண்டே இருந்தது. நேற்று சரவணன் அளவுக்கு அதிகமான போதையில் அங்கு வந்தார். ஜானகிராமனிடம் தகராறில் ஈடுபட்டு உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார்.

எனவே ஜானகிராமனை சரவணன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சரவணனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!