விவகாரத்தான கோவை ஆசிரியைக்கு பள்ளி நண்பரால் நடந்த பதற வைத்த சம்பவம்..!


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கோவை ஆசிரியை கடத்தி சித்ரவதை செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா (வயது 43). இவர் இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய பள்ளி பருவகால நண்பர் ஆசாத் (44). இவர் பல்லடத்தை சேர்ந்தவர்.

கடந்த சில மாதத்துக்கு முன்பு பல்லடத்தில் நடந்த விழாவுக்கு சசிகலா சென்றார். தனது பள்ளி நண்பரான ஆசாத்தை சந்தித்து பேசினார். அப்போது சசிகலா தனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்று விட்டதாக நண்பரிடம் கூறினார். அப்போது ஆசாத், சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆசாத் ஏற்கனவே திருமணமானவர்.

இருவரும் செல்போனில் பேசி வந்தனர். கடந்த சில நாட்களாக ஆசாத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் சசிகலாவை போனில் தொடர்பு கொண்ட நபர் தனது பெயர் மதன் என்றும், ஆசாத்தின் நண்பர் என்றும் கூறினார். ஆசாத்துடன் திருமணம் செய்து வைக்க ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்.

அதன்படி கடந்த 1-ந் தேதி திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே அவினாசி ரோட்டில் சசிகலா காத்திருந்தார். அங்கு காரில் வந்த மதன், சசிகலாவை காரில் ஏற்றினார். காருக்குள் அபுதாகீர், மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் இருந்தனர். ஆசாத் பற்றி சசிகலா கேட்டதற்கு, உங்களிடம் அவர் பணம் வாங்க சொன்னார். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை காட்டி மிரட்டினர். பின்னர் சசிகலாவை மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, சின்னியம் பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கடத்திச் சென்று ஓட்டலில் தங்க வைத்தனர். ஆசிரியையின் ஏ.டி.எம். கார்டை பறித்து மிரட்டி ரகசிய எண்ணை பெற்று ரூ.90 ஆயிரத்தை எடுத்தனர். ஒரு கட்டத்தில் சசிகலாவை கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது.

இந்நிலையில் திரும்பி வந்துவிடும்படி ஆசாத் கூறிவிட்டார் என்று கும்பல் சின்னியம்பாளையம் ஓட்டலில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் இது குறித்து சசிகலா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார், கடத்தல், கொலைமுயற்சி மற்றும் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மும்மூர்த்தி நகரை சேர்ந்த அபுதாகீர் (29) மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அபுதாகீரின் தம்பியான பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த தஸ்தகீர் (28) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!