அண்ணாச்சியால் கணவனை இழந்த ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார்.. அடுத்தது என்ன..?


ஜீவஜோதியை பாஜக தன் பக்கம் இழுத்தது அக்கட்சிக்கு எந்த அளவுக்கு பலம் தரும் என்பது தெரியவில்லை.. ஆனால் ஜீவஜோதி மேடையேறி நின்றாலே அந்த மேடைக்கு தனி கெத்து கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

படு வித்தியாசமாக அரசியல் செய்கிறது பாஜக. எப்படியெல்லாம் திராவிடக் கட்சிகளை அதிர வைக்க முடியுமோ அதையெல்லாம் பக்காவாக பிளான் போட்டு கச்சிதமாக செய்து கொண்டுள்ளனர். இதை திராவிடக் கட்சிகள் புரிந்து கொண்டு சுதாரிப்பார்களா என்பதுதான் தெரியவில்லை.

அதிரடியாக ஆட்களை கட்சிப் பக்கம் இழுத்து வருகிறது. அதற்கு கவர்ச்சியையும் ஒரு களமாக அது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நமீதாவை கட்சிக்குள் கொண்டு வந்தனர். ராதாரவியை கொண்டு வந்தனர். இந்த வரிசையில்தான் ஜீவஜோதியும் பாஜக பக்கம் திரும்பியுள்ளார்.

ஜீவஜோதி தமிழகம் முழுக்க பரிச்சயமான ஒரு பெயர். ஒரு நபர். இவரது கணவர் பிரின்ஸை சரவண பவன் அதிபர் ராஜகோபால் உத்தரவின் பேரில் கொலை செய்து கொடைக்கானல் மலையிலிருந்து தூக்கிப் போட்டனர். இந்த வழக்கு தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.


அப்போது சென்னை வேளச்சேரியில் இருந்தவர் ஜீவஜோதி. பின்னர் தனது சொந்த ஊரான வேதாரண்யம் போய் விட்டார். இப்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார் ஜீவஜோதி. சமீபத்தில் ராஜகோபால் மரணமடைந்தபோது தண்டனையை அனுபவிக்காமலேயே அவர் மறைந்தது தனக்கு ஏமாற்றம் தருவதாக கூறியிருந்தார் ஜீவஜோதி.

நிற்க… ஜீவஜோதி எந்த வகையில் பாஜகவுக்கு உதவப் போகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவருக்கு கட்சியில் பதவி தரப்படுமா என்பதும் தெரியவில்லை. ஜீவஜோதியைப் பொறுத்தவரை ராஜகோபால் அத்துமீறி அவரை அடைய ஆசைப்பட்டார். இதற்காக அவரது கணவரைக் கொன்றார். இவ்வளவுதான் ஜீவஜோதியின் பின்னணியாக உள்ளது. இதைத் தாண்டி எந்த வகையிலான அறிமுகம் அவருக்கு உள்ளது என்று தெரியவில்லை.

தொடர்ந்து பரபரப்பான பிரமுகர்களை அதேசமயம் பெரிய அளவில் பேக்கிரவுண்ட் இல்லாத பிரமுகர்களை பாஜக நம்புவது எந்த வகையில் அதற்கு உதவும் என்று தெரியவில்லை. ஜீவஜோதி-க்கு என்ன அரசியல் அடிப்படை தெரியும்? அவருக்கு என்ன அடையாளம் இருக்கு? மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? என்பது கேள்விக்குறிய ஒன்றாகும்.


அதேபோல, எந்த வகையான பிரபலமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு பாஜக கீழிறங்கிவிட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. திமுக, அதிமுகவை சமாளிக்க கொள்கை ரீதியாக முடியாமல் போகும்போது இப்படிப்பட்ட ரூட் கை கொடுக்கும் என்று யாரேனும் அட்வைஸ் செய்துள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது. நடிகைகள் வரிசையில் இப்போது ஜீவஜோதி போன்றவர்களை முன்னிறுத்தி பாஜக வாக்கு சேகரிக்க முயற்சிப்பது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது முக்கியமான கேள்வியாகும்.

ஜீவஜோதியை கட்சியில் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை பாஜக கூற விரும்புகிறது என்பதும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதேசமயம், ஜீவஜோதியின் வருகை பாஜகவுக்கு ஓரளவுக்காவது பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம். காரணம், ஜீவஜோதி நன்றாக பேசக் கூடியவர். அவரது பேச்சு பாஜகவுக்கு சின்னதாக ஒரு பலம் தரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!