கேப்மாரி திரைவிமர்சனம்..!


நடிகர் ஜெய்
நடிகை அதுல்யா
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்
இசை சித்தார்த் விபின்
ஓளிப்பதிவு ஜீவன்

ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.

அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் – வைபவி – அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் காட்சியில் பளிச்சிடுகிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, வைபவி இருவரும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போதுள்ள இளைஞர்களுக்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியது. பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஜீவனின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது படம் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘கேப்மாரி’ ரசிக்க வைக்கிறான்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!