தெலுங்கானா என்கவுண்ட்டர் – 3 பேர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!


தெலுங்கானா என்கவுண்ட்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து படுகொலை செய்த 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் நாடு முழுவ்வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்கவுண்ட்டருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன, இந்நிலையில் தெலுங்கானா என்கவுண்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் சி.எஸ். மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் இவ்வழக்கை தொடர்ந்திருந்தனர். இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது தெலுங்கானா அரசு தரப்பில் என்கவுண்ட்டரை நியாயப்படுத்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட முழு இந்த என்கவுண்ட்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும் என உத்தரவிடப்பட்டது. இக்குழுவில் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா பல்டோடா, சிபிஐ முன்னாள் இயக்குநர் பி கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெறுவர்.

இக்குழு 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை வேறு எந்த அமைப்போ, நீதிமன்றமோ இது குறித்து விசாரிக்கவும் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!