பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்த 7-ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பரிதாபம்


சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் இன்று காலை பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

வேளச்சேரி எம்.ஜி.ஆர்.நகர் பழனியப்பா தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரண்.

இவன் தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மி‌ஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு மாநகர பஸ்சிலேயே வந்து சென்றான்.

இன்று காலை வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியில் இருந்து தி.நகர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் நண்பர்களோடு சரண் பயணம் செய்தான். தி.நகர் பஸ் நிலையத்துக்குள் பஸ் சென்றபோது மாணவர்கள் படிக்கட்டுக்கு வந்து ஒவ்வொருவராக பஸ்சில் இருந்து குதித்துள்ளனர்.

அப்போது மாணவன் சரண் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர். சரண் விழுந்த வேகத்தில் பஸ்சின் சக்கரம் ஏறி நசுக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். காலை 8.30 மணி அளவில் பரபரப்பான நேரத்தில் நடந்த இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் திருஞானத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும் தவறி விழுந்து உயிரிழப்பதும் சென்னையில் தொடர் கதையாகவே உள்ளது. இதற்கு முன்னரும் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படியில் பயணம் செய்யும் மாணவர்களை டிரைவர்களும் அனுமதிக்கக்கூடாது. அப்போதுதான் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!