என்கவுண்டர் செய்யப்பட்ட 4 குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவு


ஐதராபாத்தில் இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கொண்ட கும்பலால் கடத்திச்சென்று கற்பழித்து எரித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர்.

அப்போது அந்த குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு சரமாரியாக சுட்டார். இதனால் தங்களை தற்காத்துக்கொள்ள போலீசார் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரும் உயிரிழந்தனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் சார்பில் இன்று மாலை தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 9-ம் தேதி இரவு 8 மணிவரை என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடலை பதப்படுத்திவைக்க மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!