2 ஆண்டுகளில் கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால்… கம்பி எண்ணும் முதியவர்


ஜப்பானில் வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

ஜப்பானின் சைடாமா மாகாணத்தின் கசுகபே நகரைச் சேர்ந்தவர் அகிடோசி ஒகமோடோ (வயது 71). இவர் ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான கே.டி.டி.ஐ யின் வாடிக்கையாளர் ஆவார்.

இவர் தனது தொலைபேசியில் வானொலி ஒலிபரப்புகளை கொண்டுவர இலயவில்லை. இது நிறுவனத்தின் தவறு, என குறைகூறி வந்துள்ளார். இது தொடர்பாக பலமுறை கட்டணமில்லா இலவச வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவாதித்துள்ளார்.

கே.டி.டி.ஐ நிறுவனம் அவர்களது ஒப்பந்தத்தை மீறியதாகவும் அந்நிறுவன ஊழியர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டிருந்துள்ளார். பொதுத் தொலை பேசியிலிருந்தும் அழைப்புகள் விடுத்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இவரது தொடர் அழைப்புகள் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை விவரங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வர்த்தக தடை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அகிடோசி ஒகமோடோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

‘அகிடோசி இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 ஆயிரம் முறை வாடிக்கையாளர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் கூட 411 முறை வாடிக்கையாளர் எண்ணுக்கு கால் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர்.

ஜப்பான் நாட்டில் வயதானவர்களினால் சாலை விபத்துக்கள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதாக பலரும் குறை கூறுகின்றனர். ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் 28.4 சதவீதத்தினர் 65 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!