பிரியங்கா ரெட்டியின் செல்போன் எங்கே? – போலீசார் தேடுதல் வேட்டை


ஐதராபாத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி பயன்படுத்திய செல்போனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஐதராபாத்தில் கும்பலால் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டியின் செல்போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவத்தன்று அவரது இருசக்கர வாகனம் பஞ்சரானது குறித்தும், அவருக்கு உதவுவதற்காக வந்த லாரி டிரைவர்களின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் பிரியங்கா ரெட்டி இரவு 9.22 மணிக்கு தனது சகோதரிக்கு போன் செய்து கூறியுள்ளார்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். மறுநாள் பிரியங்காவை கொலை செய்து, எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவை எரிந்த நிலையில் கிடந்தது. அவரது மணிபர்ஸ் முற்றிலும் எரிந்து இருந்தது. ஆனால் அவர் பயன்படுத்திய செல்போனை காணவில்லை. அதனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் ‘100’க்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில், சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நள்ளிரவில் ஒரு லாரியில் வந்து பெட்ரோல் வாங்கி சென்றதாக கூறி உள்ளார். அதனடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதுதான் பிரியங்காவின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

போலீசாரிடம் தகவல் கூறிய பெட்ரோல் பங்க் ஊழியரை இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்து, அவர் மூலம் குற்றவாளிகளை அடையாள அணிவகுப்பு நடத்தி வழக்குக்கு வலுசேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!