ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ராதாரவி!


பிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் இன்று இணைந்தார்.

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி, ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டார். பின்பு பல்வேறு காரணங்களால் 2000-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். கடந்த 2002-ம் ஆண்டு, சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ராதாரவி வெற்றி பெற்றார்.

ஆனால், அடுத்ததாக, 2006 சட்டப்பேரவை தேர்தலில் ராதாரவி போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த மார்ச் மாதம், நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் ராதாரவிக்கு கண்டனங்கள் குவிய ராதாரவி திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராதாரவியை கண்டிக்கவும் செய்தார்.

இதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராதாரவி, இன்று (நவ.30) பாஜகவில் இணைந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழகம் வந்துள்ள பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பு அக்கட்சியில் ராதாரவி இணைந்தார்.-Source: kamadenu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!