தலைமறைவாக இருந்த வக்கீல் வாஷிங்மெஷினில் பதுங்கி இருந்த போது பிடிபட்டார்..!


மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் திவாரி(வயது54). வக்கீல். பி.எட். கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக 3 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் வாங்கி மோசடி செய்து உள்ளார். இதுதவிர இவர் மீது மேலும் சில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக மனோஜ் திவாரி கடந்த 2002–ம் ஆண்டு தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

15 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த மனோஜ் திவாரி சம்பவத்தன்று, ஜூகுவில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருப்பதாக ஆசாத் மைதான் மற்றும் ஜூகு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர்.


அப்போது அவரது மனைவி போலீசாரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் அதிரடியாக மனோஜ் திவாரியின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இருப்பினும் வீட்டில் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில், வீட்டில் உள்ள வாஷிங்மெஷின் மேல் அதிகளவில் துணிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் பார்த்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த துணிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது, வாஷிங் மெஷினுக்குள் மனோஜ் திவாரி மறைந்து இருந்ததை கண்டனர். இதையடுத்து போலீசார் அவரை வெளியே தூக்கி கைது செய்தனர்.

போலீசார் வருவதை அறிந்து, மனைவி யோசனையின் பேரில் அவர் வாஷிங் மெஷினுக்குள் மறைந்து இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவரது மனைவி மீது ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!