இடுப்பில் தாங்க முடியாத வலி… ஸ்கேன் பரிசோதனையில் அம்பலமான உண்மை…!


தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தொழிலாளியின் இடுப்பில் சிக்கிய ‘ஊசி’ ஒரு மாதத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் தம்பிதுரை (வயது 26), தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி அதே பகுதியில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு நடத்திய சோதனையில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு அவரின் இடது பக்க இடுப்பில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் அவருக்கு ஊசி செலுத்தப்பட்ட இடம் மற்றும் இடது காலில் அதிகளவு வலி ஏற்பட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

இந்தநிலையில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகரித்தது. இதனால் அவர் கடந்த 21-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தனியார் ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ஊசியின் ஒரு பகுதி முறிந்து 7 மி.மீட்டர் அளவுக்கு தம்பிதுரையின் இடுப்பு பகுதியில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனால் அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்ற அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், தங்களது சொந்த செலவில் தம்பிதுரைக்கு அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்ற முன்வந்தனர்.

அதன்படி அந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், தம்பிதுரையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சுந்தராபுரத்தில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து தம்பிதுரையின் இடது இடுப்பு பகுதியில் சிக்கி இருந்த ஊசியை சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு அகற்றினர். தற்போது தம்பிதுரை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!