நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகள் பெரும் கெடுபிடிகளுக்கு இடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

வவுனியாவில் ராணுவம் திடீரென வீடு வீடாக சோதனைகள் நடத்தி வருகின்றன. சாலைகளில் புதியதாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ். தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று மாவீரர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி. சரவணபவன் பங்கேற்றார். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராணுவ கெடுபிடிகளுக்கு இடையே யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

25,000 மாவீரர்கள் பெயர்களுடன் கல்வெட்டு

இதனிடையே தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த 25,000 மாவீரர்கள் பெயர்களை கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டு இன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை இந்த கல்வெட்டு முன்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!