அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக மரணம்..!


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, மேலபுதுமங்கலத்தை சேர்ந்தவர் சோழன், விவசாயி. இவரது மகன் கார்த்திக் (வயது 8). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.

கார்த்திக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தீவிரமடைந்ததால் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கார்த்திக்கிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திக்கை தனிவார்டில் அனுமதித்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தான். டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 12பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!