குட்டையில் மிதந்த இளைஞன்! செல்போனை ஆராய்ந்த போது அம்பலமான மர்மம்!


கோவையில் குட்டையில் டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 23). தறித்தொழிலாளி. இவர்களது நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோருடன் அருகில் உள்ள வடுகபாளையம் குட்டையில் குளிக்க சென்றார்.

குட்டையில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றபோதும் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு விக்னேஸ்வரனை பிணமாக மீட்டனர்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விக்னேஸ்வரனின் செல்போனை ஆராய்ந்தபோது அவர் கடைசியாக டிக்- டாக் செயலியை பயன்படுத்தியுள்ளார். அதில் குட்டையில் நீந்தியபடி ஒரு காளை மாட்டின் மீது ஏறி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ எடுத்தபோது குட்டையில் மூழ்கி வாலிபர் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த டிக்-டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!