தினமும் 2 மணி நேரம்.. கண்ணிவெடிகளை அகற்றும் வீர பெண்கள்..!


பாமியன் மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் சவாலான பணியில் பாத்திமா அமிரி மற்றும் பிசா ஆகிய 2 பெண்கள் களம் இறங்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் போலீசார் மற்றும் ராணுவவீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்துகின்றனர். கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதை அறியாத பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்கிறபோது அவற்றை மிதித்து உயிரிழக்கின்றனர்.

பாமியன் மாகாணத்தில் சோவியத்-ஆப்கான் போரின்போது தலீபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இந்த நிலையில் பாமியன் மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் சவாலான பணியில் பாத்திமா அமிரி மற்றும் பிசா ஆகிய 2 பெண்கள் களம் இறங்கி உள்ளனர்.

இது குறித்து பாத்திமா அமிரி கூறுகையில், ‘‘மலைப் பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர் திரும்பிவரவில்லை, அவரது உயிரிழப்புக்கு கண்ணிவெடிகளே காரணம் எனக்கூறப்பட்டது. அந்த இளைஞரின் பிரிவால் வாடும் குடும்பத்தை பார்த்துதான் கண்ணிவெடிகளை அகற்றும் குழுவில் இணையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது’’ என்றார்.

அதே போல் இந்த பணியில் ஈடுபடவேண்டாம் என தனது தாயும், மாமியாரும் அறிவுறுத்தியும், சவாலான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இதை செய்வதாக பிசா கூறினார்.

இவர்கள் தினமும் 2 மணி நேரத்தை கண்ணிவெடிகளை அகற்றுவதில் செலவிடுகின்றனர். பாமியன் மாகாணத்தை கண்ணி வெடிகளற்ற பகுதியாக்குவதே தங்களது நோக்கம் என அந்த வீர பெண்மணிகள் கூறுகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!