பேரறிவாளனை தொடர்ந்து ஒருவழியாக ராபர்ட் பயஸுக்கு பரோல் கிடைத்தது!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு சென்னை ஹைகோர்ட் 30 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உட்பட 7 பேரும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.

இவர்கள் தற்போது தங்கள் விடுதலைக்காக போராடி வருகிறார்கள். அதே சமயம் இந்த வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளன் தற்போது 1 மாதம் பரோலில் விடுதலை ஆகியுள்ளார். அப்பாவின் உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு பரோல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ராபர்ட் பயஸும் 1 மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பரோல் கேட்டு இருந்தார். 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி உள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மனுவில் சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ராபர்ட் பயஸ் பரோலுக்கு சிறைத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நிபந்தனையுடன் பரோல் அளிக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதனால் தற்போது சென்னை ஹைகோர்ட் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.

நளினி மற்றும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள், விதிகள் எல்லாம் ராபர்ட் பயஸுக்கும் பொருந்தும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!