தரையில் படுத்து அழுது புரண்ட பெண் தலைமை ஆசிரியை! அதிர்ச்சி காரணம்!


மாணவர்களே இல்லாத பள்ளியில் பணிபுரியமுடியாது எனக்கூறி தலைமை ஆசிரியை ஒருவர் தரையில் அமர்ந்து அழுது புரண்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று தங்களுக்கு எந்த பள்ளியில் இடம் மாறுதல் வேண்டும் என விண்ணப்பித்தனர்.

அப்போது குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்திரா தனக்கும் பணியிட மாறுதல் வேண்டும் என விண்ணப்பித்தார். அதற்கு காரணம் வீட்டில் இருந்து பள்ளி நீண்ட தூரம் என்பதாலோ, குடும்பச் சூழ்நிலையோ கிடையாது.

பள்ளியில் மாணவர்களே கிடையாது. அதுதான் கசப்பான நிஜம். இரண்டு மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளியில் தன்னால் பணிபுரிய இயலாது என தெரிவித்தார் தலைமை ஆசிரியை. 100 மாணவர்கள் இருந்தாலும் சம்பளம் கிடைத்தால் போதும் என வந்து போகும் ஆசிரியர்களுக்கு நடுவில் பாடம் சொல்லித் தர மாணவர்கள் இல்லையென தலைமை ஆசிரியை ஒருவர் வேதனைப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் கவுன்சிலிங் நடத்தியவர்கள் இந்திராவின் கோரிக்கையை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த இந்திரா வேறு வழியின்றி கவுன்சிலிங் நடைபெறும் இடத்திலேயே அடம் பிடிக்கும் ஒரு மாணவரை போல தரையில் அமர்ந்து அழுது புலம்பினார். பணியிட மாறுதல் உத்தரவு வழங்கினால் மட்டுமே புறப்பட்டு போவேன் என அழுதார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பொதுவாகவே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் எடுத்தாலும் தனியார் பள்ளிகள் மீதான பெற்றோர் மோகம் ஆங்கில அறிவு என்பதற்காக மட்டுமே. அந்த விஷயத்தையும் அரசுப் பள்ளியில் சரி செய்துவிட்டால் பிரச்சனை இதுபோன்று தலைமை ஆசிரியர்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்படாது.-Source: Times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!