என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்கும் முன்பே.. பரிதாபமாக போனது பெண்ணின் உயிர்!


என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்கும் முன்னரேயே மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரை விட்டார் அமுதரசி.. சென்னையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.. இதனால் நிறைய இடங்களில் தண்ணீரும் தேங்கி நிற்கின்றன. இப்படி அசுத்த நீரில் உருவாகும் கொசுக்களால், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இதில் டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சோகமும் தினந்தோறும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு, முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.

எனினும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போன வாரம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென மக்கள் குவிந்து விட்டனர். சிகிச்சை பெறவும், மாத்திரைகளை வாங்கவும் நீண்ட கியூவிலும் நின்ற அவலம் ஏற்பட்டது.

இப்போது, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். ஆவடி அருகே திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி அமுதரசி. இவருக்கு 40 வயதாகிறது. எட்டியம்மன் நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமுதரசிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமுல்லைவாயிலில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக மதன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை எடுத்து கொண்டும், அமுதரசிக்கு காய்ச்சல் குறையவில்லை என தெரிகிறது.

இதன் காரணமாக போரூரில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அமுதரசி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் அவரை கவனித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அமுதரசி பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் பெண் உயிரிழந்தது ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!