கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு – பிரதமர் பதவியிலிருந்து விலக ரணிலுக்கு மந்திரிகள் நெருக்கடி..!


கோத்தபய ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் “வெற்றியை நோக்கிய பயணத்தை விட வெற்றியை தக்கவைத்துக் கொள்வது முக்கியமானது” என்று கூறியுள்ளார்.

தனக்கு எதிராக ஓட்டு அளித்தவர்களுக்கும் இனபாகுபாடு பார்க்காமல் பாடுபடப் போவதாகவும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதற்காக, மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார்.

அதில், அவர் பதவி விலக வேண்டும் என்று ரவுப் ஹக்கீம், மங்கள சமரவீரா, படாலி சாம்பிக ரணவாகா, நவின் திஸ்சநாயகே உள்ளிட்ட மந்திரிகள் வலியுறுத்தினர். அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப புதிய அரசு அமைக்க அதிபருக்கு வழிவிடும்வகையில் ராஜினாமா செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதால், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி முன்கூட்டியே தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதிபர் தேர்தல் வெற்றியால் உற்சாகம் அடைந்திருக்கும் ராஜபக்சே தரப்பு, தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் என்று தெரிகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசு, பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றும், புதிய நாடாளுமன்றத்தை அமைக்க தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும் ராஜபக்சே கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தால், பிப்ரவரி மாதவாக்கில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிகாரம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!