தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்சே ஒப்புதல்.!


அதிபர் தேர்தலில் தமிழர்க்கள், முஸ்லிம்கள் வாக்குகள் தமக்குக் கிடைக்கவில்லை என இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலில் வென்று 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராகி இருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து இன்று அநுராதபுரம் புனித ருவான்வெலிசாய மண்டபத்தில் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார்.

பதவி ஏற்பதற்கு முன்னதாக மஹா போதியிலும் ருவான்வெலிசாயவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசிகளை பெற்றுக்கொண்டார் கோத்தபாய. பதவி ஏற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு கோத்தபாய ராஜபக்சே ஆற்றிய உரை:

இந்த வெற்றி பெரும்பான்மை சிங்கள மக்களினால் பெறமுடியும் என்பதை தான் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தேன். ஆனாலும் இந்த வெற்றிக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.

இருந்தபோதும் அனைத்து தரப்பு மக்களையும் நான் சரிசமமாகவே கருதுவேன். தேசிய ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக முடிவுகளை எடுக்கும் போது எமக்கான நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எந்த வகையிலும் தயங்கமாட்டேன்.


எனது அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் ஒரு முன்மாதிரியாக இருக்கும். எனது நிர்வாகத்தின் கீழ் எந்த ஊழலும் இடம்பெறாது

எனது இந்த வெற்றிக்கு பெரும் சக்தியாக விளங்கியவர் மகிந்த ராஜபக்சேதான். அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக கொள்கின்றேன்.

எமது கட்சிக்கு அனைத்து வகையிலும் வலுவூட்டிய அனைத்து அதிகாரிகளுக்கும் அங்கத்தவர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே உரையாற்றினார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!