அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி..!


பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு சிறுமிகள், டிப்பர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த ராமனின் மகன் வெங்கடேஷ். இவர் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களான காயத்ரி (9) மற்றும் கீர்த்தனா(7) ஆகியோரை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, டிப்பர் லாரியானது ரத்தினபுரி புதுப்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சிறுமிகளில் ஒருவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெங்கடேஷ் மற்றும் மற்றொரு சிறுமி காயமடைந்து துடித்துக் கொண்டிருந்தனர். இதை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பார்த்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

லாரியை ஓட்டி வந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருகிவரும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் அதிகமாக சாலையில் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் காலையில் 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதியை மீறி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. இப்படித்தான், இன்றும், இந்த விபத்து நடந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி சிங்காநல்லூர் பாலம் அருகே காலை 8.35 மணியளவில் பள்ளி மாணவி மீது லாரி மோதியதில் மாணவியின் கால் உடைந்த சோக சம்பவம் அரங்கேறியது. எனவே, காவல்துறை இந்த விஷயத்தில், உறுதியான நடவடிக்கை எடுத்து கனரக லாரிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவை நகருக்குள் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!