கொழும்பில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு…!


இலங்கையின் வடமேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வடமேற்கு பகுதியில், இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தலைநகர் கொழும்புவில் இருந்து 240 கி.மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு போலீஸ் தரப்பில் கூறுகையில், “ இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, சாலையின் குறுக்கே டயர்களை தீயிட்டு எரித்து தற்காலிக தடைகளை ஏற்படுத்திய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கற்களையும் பேருந்துகள் மீது வீசினர். இரண்டு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. தற்போது, வரை உயிர்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை” என்றனர்.

துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார், சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தடுப்புகளை அகற்றியதோடு, வாக்காளர்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்றனர். இலங்கையின் கடற்கரை நகரங்களில் ஒன்றான புட்டலம் பகுதியில் இருந்து முஸ்லீம் வாக்காளர்கள், வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள மன்னார் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இலங்கையில் வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது வாக்காளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான வடக்கு யாழ்ப்பாணத்தில், காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏனெனில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராணுவம் முட்டுக்கட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, இலங்கை தேர்தல் ஆணையத்திடம் அந்நாட்டு போலீஸ், ராணுவம் மீது குற்றம் சுமத்தி புகார் அளித்தது. வாக்குப்பதிவுக்கு இடையூறாக செயல்பட்டால், நீதிமன்றத்தில் முறையிட்டு, குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்படும் என்று உள்ளூர் ராணுவ கமாண்டர்களை எச்சரித்து இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!