பின்லேடன் உருவம் போன்ற சிப்பி… பிரிட்டன் கடற்கரையில் நடந்த ருசிகரம்..!


பிரிட்டன் கடற்கரையில் கிட்டத்தட்ட ஒசாமா பின்லேடன் உருவம் போன்று இருந்த கடற்சிப்பியை கண்டெடுத்ததாக பெண் ஒருவர் ஆச்சரியமாக கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42 வது திருமண நாளை கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள வின்செல்சியா கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.

கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஆலிவர் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது மனித முகம் போன்று இருந்த சிப்பி ஒன்றை கண்டறிந்தார். அது கிட்டத்தட்ட ஒசாமா பின்லேடனைப் போலவே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோடிக்கணக்கான சிப்பிகள் கடற்கரையில் கிடந்தன. அங்கு உலாவிக்கொண்டிருந்த போது திடீரென மனித முகம் போன்று உருவம் கொண்ட சிப்பி என் கவனத்தை ஈர்த்தது. பின்பு அதை கையில் எடுத்து உன்னிப்பாக பார்க்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் பின்லேடனைப் போன்று தோற்றமளித்தது. அதை ஒரு நினைவுப்பொருளாக எடுத்து வந்தேன். பின்லேடனின் உடல் கூட கடலில் தான் வீசப்பட்டது’ என தெரிவித்தார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!