சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!


வருமான வரித்துறை, ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும், நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை, கோவை நகரங்களில் 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இரவு வரை நீடித்தது.

மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதனின் வீடு அதே பகுதியில் உள்ளது. கார்த்திகேயனின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கும் போது 3 அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர்.

மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பருக்கு சொந்தமான குடோனிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் போலீஸ் நிலையம் அருகே கேபிள் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோனுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வருமான வரி அதிகாரிகள் 7 பேர் 2 கார்களில் வந்தனர். அங்கு அவர்கள் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினார்கள்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் அந்த பகுதியில் உள்ள, மிடாஸ் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்ட்டன்ஸ் என்ற இரு நிறுவனங்களில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஸ்ரீசாய் குடோனில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரி அதிகாரிகள் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு சென்றனர். நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்து இருந்தனர்.

அதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் உரிமையாளர் சந்திரசேகர். இவர் மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

மாலை வரை நீடித்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!