மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இளைஞன்!


அரசு ஊழியரிடம் கொடுத்த கடனை திருப்பி பெற்று தருமாறு இளைஞர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பெரம்பலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள எளம்பலூர் என்னும் பகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 39. இவருடைய தாயாரின் பெயர் அம்மணிபிச்சை. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பெண் ஊழியர் ஒருவர் இவரிடம் ஒரு பெரிய தொகையை கடனாக கேட்டுள்ளார். ராஜேந்திரனும் 8 லட்சம் ரூபாயை வேறு ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி அந்த‌ பெண் ஊழியரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பெண் ஊழியர் பணத்தை ராஜேந்திரனிடம் திருப்பி தரவில்லை. இதனால் ராஜேந்திரனுக்கு கடன் கொடுத்தவர் அதிருப்தி அடைந்துள்ளார். ராஜேந்திரனிடம் பணத்தை மீண்டும் மீண்டும் கேட்டு தொல்லை செய்துள்ளார். இதனால் ராஜேந்திரன் தன்னுடைய நிலபுலன்களை விற்று அந்த பணத்தை அடைத்தார்.

தன் சொத்து முழுவதையும் விற்றதால் தற்போது ராஜேந்திரன் தன் தாயாருடன் அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டு வருகிறார். நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ராஜேந்திரன் மனமுடைந்துள்ளார்.

நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சாந்தா குறைதீர்ப்பு மையத்தில் கலந்து கொண்டார். அப்போது ராஜேந்திரன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு “நீதி வேண்டும் நீதி வேண்டும்” என்று கூச்சலிட்டு ஓடி வந்துள்ளார். இதனை பார்த்து பதறிப்போன காவல்துறையினர் ராஜேந்திரனை பிடித்து அவருடைய உடல் முழுவதிலும் தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜேந்திரன் மேற்கூறப்பட்டவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!