சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்… புதுக்கோட்டையில் பெரும் சோகம்!


கணவன் சடலத்தை பார்த்து கொண்டே இருந்த மனைவியின் உயிரும் அப்படியே பிரிந்துவிட்டது.. கணவனுக்கு 104 வயது.. மனைவிக்கு 100 வயது.. அடுத்தடுத்து மரணங்கள்.. துக்க வீட்டில் உறவினர்களின் கண்ணீர் அனைவரையும் கலங்க வைத்து விட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏடிகாலனியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 104.. மனைவி பெயர் பிச்சாயி.. வயது 100!

இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். கொள்ளு பேர பிள்ளைகள் மொத்தம் 23 பேர்! ஆனால், தம்பதி இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களை யாரும் கவனித்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.. ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள்.. ஒருவரையொருவர் கரிசனத்துடன் கவனித்தும் கொள்வார்கள்.

2 பேருமே நல்லாதான் எழுந்து நடமாடி வேலையை பார்த்து கொண்டிருந்தார்கள், ஆனால், ஆனால் சில மாதங்களாக இருவருக்குமே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. படுத்த படுக்கையாகிவிட்டனர், அப்போது, பிள்ளைகள்தான் அருகில் இருந்து கவனித்து கொண்டனர்.

இந்தநிலையில், நேற்றிரவு வெற்றிவேலுவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. அதனால், பிள்ளைகள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர், ஆனால், உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து சொந்தக்காரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். உடலை கண்டு கதறி அழுதனர்.

மாலை அணிவித்து வெற்றிவேலு சடலம் கிடத்தப்பட்டிருந்தது. இதை பக்கத்திலேயே பிச்சாயி அழுது கொண்டே உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயம் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டே இருந்தது. எவ்வளவு தேற்றியும் பிச்சாயி கணவர் உடலை பார்த்து கொண்டே இரவெல்லாம் அழுதார். இன்று காலை திடீரென அவரும் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். இதனால் பதறி போன குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றும், உயிர்பிரிந்துவிட்டது.

இதனால் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் கதறி அழுதனர். ஒரு மரணம் நடந்த வீட்டில் அடுத்த மரணமும் விழுந்ததால், அந்த ஊரே சோகத்தில் திளைத்தது. விஷயம் தெரிந்து அக்கம் பக்கம் பரவி, சுற்றுவட்டார பகுதி மக்களும் விரைந்து வந்து அஞ்சலி செலுத்த ஆரம்பித்தனர். இரு சவப்பெட்டிகள்.. இரு பூத உடல்கள்.. என இறுதி சடங்குகள் நடந்தது.. தம்பதிகள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டனர். சாவிலும் இணை பிரியாத இந்த ஆதர்ச தம்பதியை பார்த்து பொதுமக்கள் நெகிழ்ச்சி கண்ணீர் வடித்தனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!