5 வயதில் இருந்தே முருகனை வழிபட்டு வருகிறேன் – நடிகர் சிவக்குமார் விளக்கம்


நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன், 5 வயதில் இருந்தே முருகனை வழிபட்டு வருகிறேன் என நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிவக்குமார் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை. கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம். விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ஹேராம் என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் உபவாசம் இருந்து பழனி மலைக்குச் சென்று திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன்.

இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன் இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். யூடியூப்பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது… அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல். இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான். உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன என்று கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!