பாகிஸ்தான் அணி அதிசயம் நிகழ்த்துமா? வங்காளதேசத்துடன் இன்று மோதல்


இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. அரைஇறுதிக்குள் நுழையும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும்.

லண்டன் லார்ட்சில் இன்று அரங்கேறும் 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்துடன் மல்லுகட்டுகிறது. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 9 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அதன் புள்ளி எண்ணிக்கை 11 ஆக உயரும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். இதையடுத்து ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும்.

நியூசிலாந்து +0.175 என்று ரன்ரேட்டில் வலுவாக காணப்படுகிறது. பாகிஸ்தானின் ரன்ரேட் -0.792 என்று மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே நியூசிலாந்தின் ரன்ரேட்டை பாகிஸ்தான் முந்த வேண்டும் என்றால் இமாலய வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது முதலில் பேட் செய்து பாகிஸ்தான் 400 ரன்கள் குவித்தால், வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 350 ரன்கள் சேர்த்தால், வங்காளதேசத்தை 311 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியாக வேண்டும்.

இதைவிட முக்கியம் டாஸில் ஜெயிக்க வேண்டும். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து இந்த ரன்களை அடித்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. முதலில் பீல்டிங் செய்ய நேரிட்டால் அரைஇறுதிக்கு செல்லவே முடியாது. அப்போது ரன்ரேட் கணக்கீடுகளுக்கு வேலையே இருக்காது.

எனவே தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உண்டு. அவர்களை எதிர்த்து ஆடும் வங்காளதேசம் லேசுப்பட்ட அணி அல்ல.

வங்காளதேச ஆல்- ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 2 சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்களுடன், 11 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். ஒரு உலக கோப்பையில் 500 ரன் மற்றும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் வீரர் இவர் தான். அவரைத் தவிர முஷ்பிகுர் ரஹிம் (351 ரன்), தமிம் இக்பால் (227 ரன்), மக்முதுல்லா, லிட்டான்தாஸ் உள்ளிட்டோரும் பார்மில் உள்ளனர். வங்காளதேச அணியினர் ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முனைப்புகாட்டுவார்கள். அதனால் பாகிஸ்தானின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது என்றே சொல்லலாம்.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் (அயர்லாந்துக்கு எதிராக, 2008-ம் ஆண்டு) பெற்ற வெற்றியே ‘மெகா’ வெற்றியாகும். ஒருவேளை பாகிஸ்தான் அணி அந்த இலக்கை அடைந்தால் அது புதிய வரலாற்று சாதனையாகவும் அமையும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!