திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (வயது 22). இவரும், இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்து தமிழ் கலாசாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த சமயத்தில் பிரட்டி, முகநூலில் தமிழ் கலாசாரம் பற்றி தெரிவிக்குமாறு கூறி இருந்தார். இதை பார்த்ததும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(25), தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை முகநூலில் பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் முகநூல் மூலமே தகவலை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி, பேசி வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரட்டியின் பெற்றோர் மற்றும் சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரட்டி கூறுகையில், தமிழ் கலாசாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் தமிழ் கலாசாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரியபிரகாசுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தமிழ் கலாசாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும், தேதி முடிவு செய்யப்பட்டு தமிழ் கலாசாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும் என்றார். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.