திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி நித்யகமலா, மகள் லத்திகாஸ்ரீ (வயது 5). இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே காட்டுப்புத்தூருக்கு புதிதாக குடி வந்தனர். பாண்டியன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த லத்திகாஸ்ரீயை, நித்யகமலா அடித்ததாக கூறப்படுகிறது. இதில் லத்திகாஸ்ரீயின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து அவளை சிகிச்சைக்காக காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு லத்திகாஸ்ரீ அனுப்பி வைக்கப்பட்டாள். அவளுடைய உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் விரைந்து சென்று, லத்திகாஸ்ரீயின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நித்யகமலாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், லத்திகாஸ்ரீ ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்ததும், அவள் டி.வி. பார்த்துக்கொண்டு சரியாக பாடம் படிப்பதில்லை என்று கூறி அவளை, நித்யகமலா சரமாரியாக அடித்ததாகவும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக படிப்பதில்லை என்று கூறி சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!