தற்கொலைக்கு முன் 3 முறை கார் ஓட்டி ஒத்திகை பார்த்த பயங்கரவாதி ஆதில்..!


புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.

பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.

முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.


ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.

கடந்த சில மாதங்களாக ஆதிலுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காகவே 10 பேர் கொண்ட ஒரு தனி குழுவை மசூத் அசார் உருவாக்கி இருந்தான். அந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.

ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.

ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!