ஆக்ராவில் புத்தகப் பையுடன் எரிக்கப்பட்ட சிறுமி! – புகார் கொடுக்க முன்வராத குடும்பம்..!


உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சாலி என்ற 15 வயது சிறுமி, கடந்த 18-ம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, சில மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். புத்தகப் பையுடன் சேர்ந்து சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பிறகு, அக்கம் பக்கத்தினர் மூலம் மீட்கப்பட்ட சிறுமி, பாதி எரிந்த நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆக்ரா போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், சிறுமியின் கொலைக்கும் 25 வயதான அவரது உறவினர் மகன் யோகேஷுக்கும் தொடர்புடையதாகச் சந்தேகித்த போலீஸார், அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் யோகேஷ் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். சிறுமியின் தரப்பில் இருந்தும் யோகேஷ் மீது குற்றம் சுமத்தவில்லை. இதனால், இரு தினங்களுக்குப் பிறகு யோகேஷை போலீஸார் விடுவித்துவிட்டனர். காவல் நிலையத்தில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த யோகேஷ், தன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த இரு உயிரிழப்புகளுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என சந்தேகித்த காவல் துறையினர், விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தினர்.

பிறகு, யோகேஷ் வீட்டில் நடந்த சோதனையில் சில கடிதங்கள், அவரது செல்போன் சாட், இரண்டு நபரின் புகைப்படங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். செல்போனில் இருந்த இருவரையும் கைதுசெய்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாகப் பேசிய போலீஸார், “ யோகேஷ், சஞ்சாலியின் உறவினர் மகன். இவர், சிறுமியை ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். பல முறை தன் காதலை சஞ்சாலியிடம் கூறியும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஆத்திரமடைந்த யோகேஷ், சிறுமியைக் கடத்தி கொலைசெய்துள்ளார். கொலைக்கு உதவியாக இருக்க தன் நண்பர்களுக்கு தலா ரூ.15,000 தருவதாகவும் கூறியுள்ளார். இந்த மூன்று பேரும் இணைந்து திட்டமிட்டு, சஞ்சாலியைக் கொலைசெய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டும் இதுவரை யோகேஷ் மீது சிறுமி வீட்டில் இருந்து யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

‘என் மகளை யார் கொலை செய்தார்கள்? ஏன் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். நாங்கள் அனைவரையும் நன்றாகப் படிக்கவைக்கிறோம். இது, இங்கு உள்ள பலருக்கும் பொறாமையாக உள்ளது. அந்தக் கடுப்பில்தான் யாரோ இப்படிச் செய்துள்ளனர். அதற்காகத்தான், என் மகளின் புத்தகப் பைகளையும் சேர்த்து எரித்துள்ளனர்” என்று சிறுமியின் தாய் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.


இதையடுத்துப் பேசிய சிறுமியின் சகோதரி, “ மகள்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, மகள்களைப் படிக்கவைப்பது போன்றவை அரசின் முழக்கமாக உள்ளது. இருந்தும், மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது. யோகேஷ் கொலை செய்தான் என்பதை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள். அதனால், அவன்மீது தவறு இருந்தாலும் எங்கள் குடும்பத்தினர் யோகேஷை காப்பாற்றவே பார்ப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை போலீஸாரை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக தினமும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுகிறார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாகப் பேசிய யோகேஷின் தம்பி, “ எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று பிள்ளைகள். யோகேஷ் முதல் பையன், நான் இரண்டாவது. மூன்றாவதாக என் தம்பி. அவன் சில வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் இறந்துவிட்டான். என் தந்தை தினக் கூலி. யோகேஷ் மிகவும் நல்லவர். இந்த ஊரில் யாரைக் கேட்டாலும் அவனை நல்லவன் என்றே கூறுவார்கள். அவன் BEd வரை படித்துவிட்டு, தற்போது பகுதிநேர வேலைக்குச் சென்றுகொண்டிருந்தான். இது போன்று கொலைச் செயல்களில் அவன் ஈடுபட்டிருக்க மாட்டான். எங்கள் மூன்று பிள்ளைகளில் இரண்டு பேரை இழந்துவிட்டு என் பெற்றோர் தவித்துவருகின்றனர். தற்போது, கொலையாளி என்று என் அண்ணனைக் கூறும் அவச்சொல்லையும் நாங்கள் கேட்க வேண்டுமா?” என்று கேட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக, அரசியல் தலைவர்கள் அந்தச் சிறுமியின் வீட்டுக்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, சிறுமியின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக, இது சாதி ரீதியிலான கொலை எனப் பேசப்பட்டது. இதனால், கொலையைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் என்றும், அவரது வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும் கோஷமிட்டனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். பிறகு நடந்த விசாரணையில்தான், இது சாதி ரீதியிலான கொலை இல்லை எனக் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருந்தும் சிறுமி கொலை, கடந்த ஒருவாரமாக ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!